-பேசு ஒரு வார்த்தை -

கண்ட கனவுகள்
காற்றோடு போனாலும்,
உன் மேல் கொண்ட காதல்
கொலையுண்டு போகுமா...?
பார்க்காமல் பாசம் வைத்தேன்
வேசம் என்று நினைத்தாயா..?
பழகும் போதே
பாதியிலே போகின்றாய்...



உயிர் உள்ள வரை நேசிப்பேன்
முடியும் வரை சுவாசிப்பேன்
உன்னை அடையும் வரை
இமைக்காது காத்திருப்பேன்..

பார்க்க பிடிக்க வில்லை என்னை
பார்க்காமல் இருக்க முடியவில்லை உன்னை,
பாசம் கொஞ்சம் இருந்தால்
பாதி முகம் காட்டிவிடு....
வாழ்வதற்கு வயதிருக்கு
வார்த்தைகளோ புதைந்திருக்கு
வாய் திறந்து பேசி
காதலைக் காதில் சொல்லி விடு...

தண்ணீராய் ஓடும் என் கண்ணீரில்
தள்ளிவிட்டு போகாதே...
நீச்சலும் தெரியாது
நீயின்றி வாழவும் முடியாது...

... முடிவிலிப் பயணம் ...

பயணங்கள் தொடங்க முன்பே
பாதைகள் ஏன் முடிகின்றது...?
பக்கங்களைப் புரட்டமுன்பே,
கதைகள் ஏன் மடிகின்றது...?
சிறுகதையா..?
விடுகதையா..?
தொடக்கமின்றி முடிவதுதானா..? காதல்....
நெருப்பில்லாமல் புகை வரும்
நீர் வீழ்ச்சியருகில் அதுவும் நிஜம்.

விலக்க முடியாத போர்வைக்குள்
வியர்வை வந்தும் கொட்டும்.
விலகிப் போன காதலின்
நினைவுகள் வந்து முட்டும்.
கண்களைப் படைத்தவன்
கண்ணீரையும் ஏன் படைத்தான்..?
பெண்களைப் படைத்தவன்
ஆசையை ஏன் விதைத்தான்...?

சந்திரனும் சூரியனும்
சண்டையிட்டு கொண்டதில்லை.
கிரகணம் வந்து வந்து
சந்திரனைக் கொன்றதில்லை.
நினைவுகள் வந்து வந்து
என்னைஇங்கு கொல்வதனால்
நிம்மதியைத் தேடித்தேடி
நான் நிலையாக இருந்ததில்லை.

தொடரும் பயணங்கள்
தொடக்கத்தில் முடிவதுண்டு,
தொட்டுவிட்ட காதலும்
விட்டுவிட்டு போவதுண்டு

- கல்லறை வாசம் -

உயிருடன் இருக்கின்றேன் என
உரக்கச் சொல்லுவதற்கா?
கல்லறையில் தூங்கும் என்னை
அழுது எழுப்புகின்றாய்....

காதலைச் சுமந்தபடி கல்லறைக்குள்
கண்ணீருடன் தூங்கும் என்னிடம்
நலமுடன் உள்ளாயா..? என
நலம் விசாரிக்கின்றாய்....

என் மனதை எடுத்து விட்டு
மன்னித்துவிடு என மனம்திறந்து
சொல்லுகின்றாய், இரண்டு மனம்
உண்டென்ற வைராக்கியத்திலா..?

நுரையீரல் சுவாசிக்க மறுத்தபின்
இதயம்
இடப் பக்கம் துடித்தாலென்ன..?
வலப்பக்கம் துடித்தாலென்னா..?

அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகரும் பெண்ணே..!
இடிமேல் இடிவிழுந்தால்
இதயம்தான் தாங்குமா கண்ணே..!

உதிர்ந்து உதிர்ந்து போனாலும்
மொட்டுகள் மீண்டும் மலர்ந்துவிடும்
இடிந்து போனபின்பு இதயம்
கல்லறைக்குத்தானே சென்றுவிடும்.....

-பாதை மாறிச் சென்றதேனோ?-

பெண்ணே...!

ரவிவர்மன் தீட்டிய தூரிகையை
எறிந்த இடத்தில் பிறந்தவளா ?- நீ
பிரமன் கலந்த கலவையில்
கை நழுவி விழுந்தவளா..?

விடை தேடியலையும் விழிகளுக்கு
வினாக்கள் என்னவென்று புரியவில்லை.
வெள்ளைத்தாழில் கொள்ளை கொண்ட
விம்பமென்ன தெரியவில்லை.

இறுக்கிப் பூட்டிய இதயத்துள்
இருக்கை போட்டுக் கொடுத்த பின்பு
காற்றுப் புகா இடைவெளியால்
நழுவிச் சென்ற மாயமென்ன.?

என் கண்ணிரண்டும் நீர் சொரிய
இதயம் நின்று பற்றியெரிய
பாவனைகள் மாற்றி நீயும்
பாதை மாறிச் சென்றதேனா?

- மறந்து சென்றவள் -

மறந்து விட்டேன் உன்னை
மறந்து விடு என்னை-என
மனம் திறந்து சொன்னவளே..!
மறைவாக இருக்கும் மனதை
ஏனடி
திறந்து பார்க்க மறந்து விட்டாய்?

மாராப்புச் சேலைக்குள்
மறைந்திருப்பதா மனம்?
வளர்ந்த பின்பும் காதலை
வதைப்பதுதானா உந்தன் குணம்?

வாடகையின்றி
உன் வாழ்கைக்காக
துடித்த என்னை
வார்த்தையெனும் வாளால்
வீசி விட்டுச் செல்கின்றாய்........
சென்றாலும் பெண்ணே..!
செல்வாக்காய் இரு
என் சொல்வாக்கு பலிக்கட்டும்

- பிரிவின் பிரியம் -



கறுப்பு நிலா வெளிச்சம் போட்டு
காதலர்கள் ஒன்றிணைய
கவியாக நுழைந்த மனம்
காணாமல் செல்கின்றது.

காதல் றோட்டில் கைபிடித்து
காதலராய் பயணித்த
ஞாபகங்கள் நிலைத்திருக்க
கண்ணீர்த் துளிகள் சுரக்கிறது.

நாக்கில் உருண்டு மலரும்
வார்த்தைகள்தான்
மனவலியைப் பெருக்குகின்றது.
நாளும் உந்தன் நினைவு
என்னுள் மெழுகாக உருகுகின்றது.

நீ உச்சரித்த
ஒவ்வொரு வார்த்தைகளும் உயிரை
முள்ளுமுள்ளாய் குத்தினாலும்
உன்னாலே என் மனம்
விறையுண்டு இருக்கின்றது.

வேணாமென்று சொல்லி
கையுதறிப் போனாலும்
வேண்டுமென்றே கண்கள்
உன்
முகம் காணத் தவிக்கின்றது.