- கல்லறை வாசம் -

உயிருடன் இருக்கின்றேன் என
உரக்கச் சொல்லுவதற்கா?
கல்லறையில் தூங்கும் என்னை
அழுது எழுப்புகின்றாய்....

காதலைச் சுமந்தபடி கல்லறைக்குள்
கண்ணீருடன் தூங்கும் என்னிடம்
நலமுடன் உள்ளாயா..? என
நலம் விசாரிக்கின்றாய்....

என் மனதை எடுத்து விட்டு
மன்னித்துவிடு என மனம்திறந்து
சொல்லுகின்றாய், இரண்டு மனம்
உண்டென்ற வைராக்கியத்திலா..?

நுரையீரல் சுவாசிக்க மறுத்தபின்
இதயம்
இடப் பக்கம் துடித்தாலென்ன..?
வலப்பக்கம் துடித்தாலென்னா..?

அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகரும் பெண்ணே..!
இடிமேல் இடிவிழுந்தால்
இதயம்தான் தாங்குமா கண்ணே..!

உதிர்ந்து உதிர்ந்து போனாலும்
மொட்டுகள் மீண்டும் மலர்ந்துவிடும்
இடிந்து போனபின்பு இதயம்
கல்லறைக்குத்தானே சென்றுவிடும்.....